பிள்ளையார்குப்பம் முருகன் கோவில் திருவிழாவில்கொதிக்கும் எண்ணெயில் கைகளால் வடை சுட்ட பக்தர்கள்


தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்குப்பம் முருகன் கோவில் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கைகளால் வடை சுட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழுப்புரம்


விழுப்புரத்தை அடுத்த பில்லூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதுபோல் 39-ம் ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 7 மணிக்கு காவடி அபிஷேகமும், 8 மணிக்கு காவடி ஊர்வலமும், மதியம் 12.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் நெகிழ்ச்சி

அதன் பின்னர் பக்தர்கள் சிலர் தங்களது தாடையில் அலகு குத்திக்கொண்டு கொதிக்கும் எண்ணெயில் வடைபோட்டு சிறிது நேரத்தில் அந்த வடைகளை எண்ணெய் சட்டியில் இருந்து கையாலேயே எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை பார்த்த கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மிகுந்த நெகிழ்ச்சியடைந்தனர்.

இந்த வடைகளை, பக்தர்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுத்து வாங்கிச்சென்றனர். அதபோன்று விரதம் இருந்த பக்தர் ஒருவருக்கு மிளகாய்பொடி அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு இடும்பன் பூஜையும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும், நாடக குழுவினரின் தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தீ மிதி திருவிழா

இதேபோல் வளவனூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

பின்னர் பக்தர்கள், பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். பஞ்சமாதேவி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சியும், நேற்று மாலை தீமிதி திருவிழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி பயபக்தியுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story