பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த 8-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு பக்தர்கள் சென்றனர். பின்னர் அம்மனை வழிபட்டு, அங்கிருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதன்பிறகு குடங்களில் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். மேலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் ஆகியவை நேற்று நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இந்த நிகழ்ச்சியில் பிள்ளையார்நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.