சாமி வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஒட்டன்சத்திரம் அருகே மகாமாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமி வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுதல், அக்கினிசட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மகாமரியம்மன் உற்சவர், இடையக்கோட்டையில் அனைத்து தெருக்களிலும் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை நேர்த்திக்கடனாக காளியம்மன், கருப்பணசாமி உள்ளிட்ட சாமி வேடமணிந்த பக்தர்கள் டிராக்டரில் தெரு, தெருவாக ஊர்வலமாக சென்றனர். இவர்களுக்கு தேங்காய், பழம் வைத்து சூடம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதனையடுத்து இரவில் மஞ்சள் நீராட்டுடன் மகாமாரியம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.