பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவில்
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், வருகிற 29-ந்தேதி பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தற்போதே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர்.
தற்போது மகரவிளக்கு பூஜைையயொட்டி சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டு உள்ளதால், அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்ய படையெடுத்து வருகின்றனர். இதனால் பழனியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அலைமோதிய பக்தர்கள்
இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அடிவாரம் பாதவிநாயகர் கோவில், படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம், தரிசன வழிகள் ஆகிய இடங்களில் பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வரும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
மலைக்கோவிலில் உள்ள பொது, கட்டணம், சிறப்பு கட்டணம் தரிசன வழிகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்ததால் வெளிப்பிரகாரம் வரையிலும் வரிசை காணப்பட்டது. இதன்காரணமாக சுமார் 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த பழனி டவுன், அடிவாரம் மற்றும் பட்டாலியன் போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.