திருமழிசையில் பெருமாள் கோவிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவள்ளூர் அருகே திருமழிசை பெருமாள் கோவிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமழிசை,
திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசை ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோவிலில் திரு அவதார மகோற்சவ திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா கடந்த 29-ந் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் உச்சவர் ஜெகந்நாத பெருமாள் காலை, மாலை என இருவேளைகளில் சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி கோவிந்தா! கோவிந்தா! என கோஷமிட்டபடி பயபக்தியுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இந்த தேரானது அசைந்தாடியபடி 4 வீதிகளில் வலம் வந்தது. விழாவில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.