பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். சுமார் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வார விடுமுறை
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முகூர்த்தம், வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் காலை முதலே மலைக்கோவில், அடிவாரம், தரிசன பாதைகள், செல்லும் வழிகள் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ரத காவடி
குறிப்பாக பொது, கட்டண தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சென்று முருகப்பெருமானை தரிசித்தனர். கூட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.
இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
பழனி முருகன் கோவிலுக்கு நேற்று நாகை மாவட்டம் ஆய்மூர், கீழக்கொருக்கை பகுதியை சேர்ந்த பக்தர்கள் ரத காவடி எடுத்து வந்தனர். அவர் காவடியுடன் ஆடியபடி பழனி மலையை சுற்றி வந்தனர். இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். இந்த ரத காவடியை பலரும் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.