பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதன்படி நேற்று வாரவிடுமுறை நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே பழனி பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
எனவே வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தர்கள் என பலர் மின்இழுவை ரெயில் வழியாக செல்ல வந்ததால், அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கவுண்ட்டரை தாண்டி கிரிவீதி வரை நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று சென்றனர். இதேபோல் படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக சென்றனர். மலைக்கோவிலில் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம், முடிக்காணிக்கை செலுத்துதல், தங்கரத புறப்பாடு போன்றவற்றுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை கோவில் 'சர்வரில்' பிரச்சினை ஏற்பட்டது. எனவே டிக்கெட், முடிக்காணிக்கை சீட்டு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அங்குள்ள கவுண்ட்டர்களில் வெகுநேரம் காத்திருந்தனர். பின்னர் 'சர்வர்' பிரச்சினை சரிசெய்யப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.