திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்


தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பலஆயிரம் பக்தர்கள் குவிந்ததால் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினமான நேற்று பலஆயிரம் பக்தர்கள் குவிந்ததால் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு ஒருவார காலம் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா தலம், ஆன்மிக தலம் போன்ற இடங்களில் மக்களின் கூட்டம் அதிக அளவு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பலஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்.

கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் முதியோர்களுக்கு தனி வரிசை என மூன்று வரிசைகள் உள்ளன.

5 மணிநேரம் காத்திருந்து...

இதில், அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம் என்பதால் நேற்று கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.

போக்குவரத்து நெரிசல்

முருக பக்தர்களின் கூட்டமும், அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் வந்த வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகளவு காணப்பட்டது. கோவிலில் ரூ.300 கோடியில் மெகா திட்ட வளாக பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் கார் பார்க்கிங் நிரம்பி வழிந்தது. இதையடுத்து திருச்செந்தூர் ரதவீதிகள், தெப்பகுளம் பகுதி, பஸ்நிலையம் பகுதியில் கார்கள், வேன்கள், பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் கோரிக்கை

இதை தவிர்க்கும் வகையில் கோவிலில் மெகா வளாக திட்டப்பணிகள் முடியும் வரை நகரின் எல்லையில் தற்காலிக பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என திருச்செந்தூர் நகர வாசிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story