திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள்; 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
வளர்பிறை சஷ்டி தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் தங்களுடைய குடும்பத்துடன் குவிந்தனர். சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
வளர்பிறை சஷ்டி தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் தங்களுடைய குடும்பத்துடன் குவிந்தனர். சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று முருகப்பெருமானுக்கு உகந்த நாளான வளர் பிறை சஷ்டி தினமாகும்.
அதனால் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து கடலில் புனித நீராடினர்.
பின்னர் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.