புரட்டாசி மாத முதல் ஞாயிறு:சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திரண்ட பக்தர்கள்
புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
தென்தாமரைகுளம்:
புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
அய்யா வைகுண்டசாமி தலைமைபதி
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசையில்...
அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யாவை வணங்கி சென்றனர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது. பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து சாமிதோப்பு தலைமை குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்ன தர்மம் நடைபெற்றது.