ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.
ராமேசுவரம்,
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.
ராமேசுவரம் கோவில்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராமேசுவரம் வந்த பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடவும் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் குவிந்தனர்.
தீர்த்தக்கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
பக்தர்கள் கூட்டம்
இதேபோல் அம்பாள் சன்னதி, நடராஜர், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளிலும் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனிடையே சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் முடிந்த நிலையில் நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமியை தரிசனம் செய்யவும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வந்திருந்தனர்.
இதனால் ராமேசுவரம் கோவில் ரதவீதி சாலை, அக்னிதீர்த்த கடற்கரை, கிழக்கு வாசல் என நகரின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.