கோத்தகிரியில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
கோத்தகிரியில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
கோத்தகிரி
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் பங்கேற்க கோத்தகிரியில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வார்கள். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு கோத்தகிரி கடை வீதி பகுதியில் உள்ள பழனி முருகன் பாதயாத்திரை குழு சார்பில், அதன் தலைவர் வடிவேல் தலைமையில் தொடர்ந்து 28-வது ஆண்டாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 180 பேர் பாதயாத்திரையாக காவடிகள் எடுத்து பக்தி பாடல்களை பாடியவாறு பழனிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக கடைவீதி மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் பாதயாத்திரையாக சென்றால் கோவிலை சென்றடைய சுமார் 6 நாட்கள் தேவைப்படும். பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபட்டு திரும்புவது மன அமைதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றனர். இதேபோன்று குன்னூரில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டு சென்றனர்.