ஆடு, கோழியை வாயில் கவ்வியபடி பக்தர்கள் ஊர்வலம்
வேலூரில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கடவுள் வேடமிட்டு பக்தர்கள் ஆடு, கோழியை வாயில் கவ்வியபடி ஊர்வலமாக சென்றனர்.
மயானக்கொள்ளை திருவிழா
வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று மயானக்கொள்ளை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மயானக்கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வேலூர் ஓல்டுடவுன், சத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், மக்கான் அம்பேத்கர்நகர், சேண்பாக்கம், சலவன்பேட்டை, கொணவட்டம், விருதம்பட்டு, மோட்டூர், கழிஞ்சூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை செய்தனர். பின்னர் அம்மனுக்கு கோழி, ஆடுகள் பலியிடப்பட்டது.
பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடு, கோழியை வாயில் கவ்வி பிடித்தப்படி சாமி ஆடினார்கள். அதையடுத்து கோவிலில் இருந்து அம்மனை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் பின்னே முருகன், விநாயகர், சிவன், அங்காள பரமேஸ்வரி அம்மன், அனுமன் போன்று கடவுள் வேடமிட்ட பக்தர்கள் சென்றனர். சிலர் கடவுள் வேடமிட்டு கையில் சூலாயுதம் ஏந்தியபடி ஆக்ரோஷமாக சென்றது பார்ப்பதற்கு தத்ரூபமாக இருந்தது. ஆண்கள் பலர் பெண்கள் போன்று வேடமிட்டிருந்தனர்.
சில பக்தர்கள் ஆடு, கோழி மற்றும் எலும்பு துண்டுகளை கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் சென்றனர்.
ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மயானம் மற்றும் பலாற்றங்கரையை அடைந்தது. மேள, தாளங்கள் முழங்கியபடி சென்ற ஊர்வலத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் நடனமாடி ஆரவாரம் செய்தனர்.
சூறையிட்டு நேர்த்திக்கடன்
வேலூர்- காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை ஊர்வலமாக வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரைக்கு எடுத்து வந்தனர். அங்கு வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. அதன்பின்னர் பக்தர்கள் அம்மனை சுற்றி வந்து உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை, முட்டை, எலுமிச்சைப்பழம் போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
தொடர்ந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் சமாதிகளுக்கும் சென்று வழிபட்டனர். பின்னர் தாங்கள் கொண்டு சென்ற சாமியுடன் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊர்வலமாக திரும்பினார்கள். ஊர்வலம் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் ஏராளமான பொதுமக்கள் சாலையோரம் நின்று அம்மனை வழிபட்டனர்.
700 போலீசார் பாதுகாப்பு
மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி வேலூரின் முக்கிய பகுதிகளில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அசம்பாவிதங்களை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் மாநகரில் 10-க்கும் மேற்பட்ட தேர்களில் அம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தில் தகராறு, அடிதடி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க ஊர்வலத்துடன் போலீசார் சென்றனர். ஒவ்வொரு தேருக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலூர், காட்பாடியில் இருந்து மாலை 5 மணியளவில் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி பாலாற்றை நோக்கி அணிவகுத்து வந்தன.
ஒவ்வொரு தேர்களும் பல்வேறு வடிவங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேர் அலங்காரத்தை பொதுமக்கள் கூடிநின்று பார்த்து ரசித்து, அம்மனை வழிபட்டனர்.
போக்குவரத்து மாற்றம்
மயானக்கொள்ளையையொட்டி சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வேலூர் பழைய பாலாற்று பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
மயான கொள்ளையையொட்டி வேலூர் மாநகரப்பகுதியில் 16 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.