சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு


சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

சேலம்

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்தல் நேற்று தொடங்கியது.

இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். பக்தர்கள் கோவிலில் விடிய, விடிய பொங்கல் வைத்தனர். மேலும் பக்தர்கள் பலர் மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர். பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நாளை (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.

போலீஸ் துணை கமிஷனர் ஆய்வு

இன்று (புதன்கிழமை) கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், திருட்டு, வழிப்பறி உள்பட குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை கண்காணிப்பதற்காக கோவில் முன்பு தனி அறை அமைத்து, அங்கு திரை வைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா நேற்று மதியம் கோவிலுக்கு வந்து ஆய்வு நடத்தினார். பின்னர் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பற்றி போலீசாரிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலும், விழா சிறப்பாக நடைபெறவும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இன்று உள்ளூர் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், சேலம் சின்ன மாரியம்மன் உள்ளிட்ட மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று இரவு ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதனால் இரவு அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஏராளமானவர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து வந்து வழிபட்டனர். அப்போது பக்தர்கள் சிலர் பறவை காவடியுடன் தேசிய கொடியையும் ஏந்தி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story