இளநீர் குலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம்
மங்குழி பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி இளநீர் குலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.
கூடலூர்
மங்குழி பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி இளநீர் குலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.
அம்மன் கோவில் திருவிழா
கூடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற மங்குழி பகவதி அம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6.30 மணிக்கு உஷ பூஜையும், 11 மணிக்கு அம்மனின் அருள் வாக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மொத்த வயல் பகுதியில் பராமரித்து வந்த தென்னை மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதில் விளைந்து காணப்பட்ட இளநீர் குலைகள், தென்னம் பாலைகள் பயபக்தியுடன் வெட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அங்கிருந்து ஆதிவாசி மக்களின் பாரம்பரிய மேள-தாளங்கள் முழங்க பக்தர்கள் இளநீர் குலைகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
அத்தாழ பூஜை
இதையடுத்து இளநீர் குலைகள், அம்மனுக்கு படையலிடுவதற்காக வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து விசேஷ பூஜைகளும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
நாளை(புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு கலச பூஜைகள், பஞ்ச கவ்யம் மற்றும் கலச அபிஷேகங்கள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மகா குருதி பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.