தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் நந்தீஸ்வரர் சிலையை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் புதிதாக வைக்கப்பட்ட நந்தீஸ்வரர் சிலையை இந்து சமய அறநிலையத்துறையினர் அகற்ற முயன்றதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் புதிதாக வைக்கப்பட்ட நந்தீஸ்வரர் சிலையை இந்து சமய அறநிலையத்துறையினர் அகற்ற முயன்றதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நந்தீஸ்வரர் சிலை
தேனி அல்லிநகரம் மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இந்த கோவில் பராமரிப்பு பணிகள், திருவிழா ஏற்பாடுகள் போன்றவற்றை அல்லிநகரம் கிராம கமிட்டியினர் நீண்டகாலமாக செய்து வருகின்றனர். இந்த கோவில் கொடி மரம் கடந்த ஆண்டு சேதம் அடைந்தது. இதையடுத்து புதிய கொடிமரம் வைக்க கிராம கமிட்டியினர் முடிவு செய்தனர். அத்துடன் நந்தீஸ்வரர் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கிராம கமிட்டியும், அல்லிநகரம் சிவனடியார் குழுவினர் சார்பில் மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 5½ டன் எடை கொண்ட நந்தி சிலை தயாரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் தேனிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலை ஒரு தனியார் மில்லில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் அந்த நந்தீஸ்வரர் சிலை வீரப்ப அய்யனார் கோவில் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டது.
இந்தநிலையில் கோவில் வளாகத்தில் புதிதாக நந்தி சிலை அனுமதியின்றி கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
அகற்ற எதிர்ப்பு
அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று அந்த சிலையை அகற்ற வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் பலர் கோவில் பகுதியில் திரண்டனர். கிராம கமிட்டியினரோடு, பா.ஜ.க. நிர்வாகிகள், இந்து எழுச்சி முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். நந்தீஸ்வரர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதால் அதை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் தெரிவித்தனர். அதற்கு பக்தர்கள், சிலை வைக்க அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தின் போதும், சிலையை அகற்ற பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.