கோவிலில் நந்தவனம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை
கோவிலில் நந்தவனம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகவும், நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் சாமி இங்கு அருள்பாலித்து வருகிறார். 3 குளங்களை கொண்ட இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் நந்தவனம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு கோவிலிலும் நந்தவனம் அமைக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் பூக்களை கொண்டு பூஜைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில் கிட்டத்தட்ட 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் தலவிருட்ச மரம் மற்றும் சுவாமிகளுக்கு அணிவிக்கக்கூடிய வில்வம், நந்தியாவட்டை, அரளி உள்ளிட்ட உகந்த மலர்களை நட்டு பராமரித்து அதில் இருந்து கிடைக்கும் பூக்கள் மூலம் கோவிலில் நடைபெறும் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். ஆகவே, இந்த கோவிலில் நந்தவனம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
்