பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
x

பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் குடும்பத்துடன் படையெடுத்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

படையெடுத்த பக்தர்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம், தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது சபரிமலை சீசன் என்பதால் வெளியூர், வெளிமாநில அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். இதனால் காலை, மாலை வேளையில் அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையே பள்ளிகளில் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பழனிக்கு குடும்பத்துடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் நேற்று வார விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவிலில் உள்ள தரிசன வழிகள் நிரம்பியதால் வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பழனிக்கு வரும் பக்தர்களின் கார், பஸ், வேன் போன்ற வாகனங்களை நிறுத்த கிழக்கு கிரிவீதி, பாலசமுத்திரம் ரோடு பகுதியில் சுற்றுலா பஸ்நிலையம் உள்ளது. இங்கு கட்டணம் இன்றி வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். அதேவேளையில் கிரிவீதிகளில் வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறும் வாகனங்களுக்கு போலீஸ் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் பழனியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story