ஆடிப்பெருக்கையொட்டிகாவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்
நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடிப்பெருக்கு
பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு நடத்துவார்கள். கோவில்களில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று காலை முதலே பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் புனித நீராடி காவிரி ஆற்றங்கரையில் பிள்ளையார் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுமணத் தம்பதிகள் தங்களது தலையில் காசுகளை வைத்து காவிரியில் புனிதநீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கும், கன்னி தெய்வங்களுக்கும், காவிரி தாய்க்கும் நன்றி செலுத்தும் வகையில் வாழை இலையில் காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, காப்பரிசி, புத்தாடை, மஞ்சள் கயிறு மற்றும் முளைப்பாரிகள் ஆகியவற்றை படைத்து வணங்கினர். பின்னர் பெண்கள் வீட்டில் இரந்து கொண்டு வந்த முளைப்பாரிகளை ஆற்றில் விட்டனர். மேலும் காவிரி ஆற்றில் புனித நீராடிய பின்பு விரைவில் திருமணம் நடைபெற வேண்டி இளம்பெண்கள் கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.
நேர்த்திக்கடன்
பின்னர் மதியம் காவிரி ஆற்றில் பக்தர்கள் தங்களது குல தெய்வ கோவில்களில் இருந்து கொண்டு வந்த வேல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை சுத்தம் செய்து கரகம் பாலித்து பூஜைகள் செய்தனர். பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று அதிகாலை முதலே நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் காவிரி ஆற்றில் குளித்து ஆடி பதினெட்டு பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே பாதுகாப்பு கருதி காவிரி கரையோரத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மோகனூர் காவிரி ஆறு
மோகனூர் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி, சாமியை வழிபட்டனர். இதையொட்டி காவிரிக்கரை அமைந்துள்ள மோகனூர் அஸ்ஸலாதேஸ்வரர் கோவில் அருகில் உள்ள படிக்கட்டு துறை பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து தேங்காய், பழம், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர். புதுமண தம்பதியினர் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து அசலதீபேஸ்வரர், மதுகரவேணி அம்பாளை வழிபட்டனர். பெண்கள் புதிய தாலி கயிற்றை மாற்றிக் கொண்டும் புதுமண தம்பதிகள் தங்களின் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு, பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை காவிரி ஆற்றில் விட்டனர். அதற்காக அதிகாலை முதலே, பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக காவிரி ஆற்றில் குவிந்தனர்.
நாமக்கல், எருமப்பட்டி, ராசிபுரம், வளையப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி வழிபட்டனர்.