ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் புனித நீராடிய பக்தர்கள்
ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சுருளி அருவி
கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் புண்ணிய தலமாகவும் சுருளி அருவி விளங்கி வருகிறது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதேபோல் புண்ணிய தலமாக விளங்குவதால் நீராடுவதற்காக பக்தர்கள் வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவிக்கு அதிக அளவில் வந்தனர். அப்போது அவர்கள் அருவியில் புனித நீராடினர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
பின்னர் அருவி பகுதியில் உள்ள விபூதி குகை கோவில், சுருளி ஆண்டவர், சுருளிவேலப்பர், ஆதி அண்ணாமலையார் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதற்காக அங்குள்ள சுருளி ஆற்றங்கரையில் அமர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.
இதற்கிடையே நேற்று ஆடி மாத முதல் நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இருப்பினும் வரும் காலங்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் சுருளி அருவி பகுதியில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வனப்பகுதிகளுக்குள் செல்லவிடாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.