கருப்பசாமி கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்


கருப்பசாமி கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
x

சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

சேத்தியாத்தோப்பு,

ஆடி அமாவாசை விழா

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு விநாயகபுரத்தில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 5001 பால்குடம் மகா அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்து வந்தது.

இதில் கடந்த 13-ந்தேதி சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று கரையிலிருந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 14-ந்தேதி முளைப்பாரி வைபோகமும் நடைபெற்றது.

பால்குடம் ஊர்வலம்

விழாவில் நேற்று 5001 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. உலக மக்கள் நலன் வேண்டி விநாயகபுரம் இளம் சித்தர் பாலகிருஷ்ணன் நடத்திய இந்த பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். சேத்தியாத்தோப்பு கடைவீதி குறுக்கு ரோடு வழியாக கோவிலை ஊர்வலமாக வந்தடைந்தனர்.

பின்னர் கருப்பசாமி மற்றும் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, 5001 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கருப்பசாமிக்கு ஆடு, கோழி பலி கொடுக்கும் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சிலம்பாட்டம், செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இசைக் கச்சேரி, தேவகோட்டை அபிராமி கானா பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விநாயகபுரம் கருப்பசாமி அருள் வாக்கு சித்தர் ஆறுமுகசாமி மற்றும் விநாயகபுரம் கருப்பசாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story