வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். தெப்பல் உற்சவமும் நடந்தது.
ஆடி கிருத்திகை
காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு மூலவர் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டு வெள்ளி கவச விபூதி காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது.
தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நேற்று காலை முதலே பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, புஷ்பக் காவடி எடுத்து வந்து மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை தெப்பக்குளத்தில் நீராடி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மேலும் வள்ளி மலை தேரடி வீதிகளில் ஆங்காங்கே ஒரு சில தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில், பொன்னை இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், திருவருட்செல்வன், குமரவேல் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை, சுகாதாரத் துறை, தீயணைப்புத்துறை உள்பட பல்வேறு அரசுத்துறை சார்பில் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்திருந்தனர்.
தெப்பல் உற்சவம்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு சரவணப்பொய்கை தெப்பக்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவத்தின் முதல்நாள் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.30 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சுற்றி வந்தார்.
இதில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, தக்கார் சிவராமகிருஷ்ணன் மற்றும் உற்சவ கமிட்டி ஊர் நாட்டாண்மைக்காரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.