சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலம்


சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலம்
x

பங்குனி உத்திரவிழாவில் உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 2-ந்தேதி முதல் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது. விழாவில் காவடி மற்றும் பால்குடம் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலை 9 மணிக்கு உளுந்தூர்பேட்டை வேடசெட்டி கோவில் குளக் கரையில் உள்ள முருகனுக்கு காவடி ஸ்தபன பூஜை நடைபெற்றது. பின்னர் காவடிக்கு பூஜை நடந்தது.

காவடி ஊர்வலம்

தொடர்ந்து, விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சென்றனர். சில பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், செடல் குத்தியும் ஊர்வலமாக சென்றனர்.

உளுந்தூர்பேட்டை குளக் கரையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து காலை 10.30 மணிக்கு சுப்பிரமணிய சாமி கோவிலை வந்தடைந்தது.

பின்னர் சாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். விழாவில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story