ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்


தினத்தந்தி 5 Aug 2023 2:30 AM IST (Updated: 5 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

தேனி

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன்

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதோடு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதன்படி, ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று தேனி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

பிரசித்திபெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அப்போது அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். மேலும் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதேபோல் பத்ரகாளிபுரம் பத்ரகாளியம்மன், உப்புக்கோட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

சிறப்பு வழிபாடு

போடியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. பின்னர் தாயார் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்கள் அருள்பாலித்தார்.

இதேபோல் போடியில் உள்ள சாலை காளியம்மன் கோவில், சுப்புராஜ்நகர் புதுக்காலனி ஆதிபராசக்தி அம்மன் கோவில், சவுடம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

கம்பத்தில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதன்பிறகு அம்மன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story