அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேபோல் நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. ஒரு சில பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.