பேரகணி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி பேரகணி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கலெக்டர் அம்ரித், அதிகாரிகள் பாரம்பரிய உடையணிந்து அம்மனை வழிபட்டனர்.
கோத்தகிரி,
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி பேரகணி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கலெக்டர் அம்ரித், அதிகாரிகள் பாரம்பரிய உடையணிந்து அம்மனை வழிபட்டனர்.
ஹெத்தையம்மன் பண்டிகை
நீலகிரி மாவட்டத்தில் அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் படுகர் இன மக்கள் தொத நாடு, பொரங்காடு, மேற்கு நாடு, குந்தை சீமை என 4 சீமைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குல தெய்வமான ஹெத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டிற்கான பண்டிகை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. பண்டிகையின் முக்கிய நாளான நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
நேற்று கோத்தகிரி அருகே பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து, காலில் செருப்பு அணியாமல், இசைக்கருவிகள் முழங்க ஆடல் பாடல்களுடன் வாகனங்களில் ஹெத்தையம்மன் கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டனர். மேலும் கலெக்டர் அம்ரித், குன்னூர் ஆர்.டி.ஓ. புஷ்ணகுமார், கோத்தகிரி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்து கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம்
பண்டிகைக்கு வந்த பக்தர்களுக்கு மடியாடா பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்கள் மூலமாக பேரகணிக்கு சென்றதால், கோத்தகிரியில் இருந்து பேரகணிக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோத்தகிரியில் இருந்து பேரகணிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், மிளிதேன் வழியாக சென்று சுண்டட்டி கிராமம் மற்றும் கப்பட்டி கிராமங்கள் வழியாக திரும்பி வரும் வகையில் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருந்தது.
மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு குப்புசாமி தலைமையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு பணியில் 200 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும் கோத்தகிரி ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு பேரகணி கிராமமே விழா கோலம் பூண்டு, மக்கள் வெள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது.