திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 1 May 2023 12:30 AM IST (Updated: 1 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் குவிந்தனர். சுமார் 6 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் குவிந்தனர். சுமார் 6 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கோவில்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

பக்தர்கள் குவிந்தனர்

இந்த நிலையில் பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இதைமுன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்.

கோவில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

6 மணி நேரம்

இதில் திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கடலில் புனித நீராடி கட்டண தரிசன வரிசையிலும், இலவச தரிசன வரிசையிலும் சுமார் 6 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களின் வாகனங்கள் தெப்பகுளம் பகுதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, டி.பி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. தாலுகா அலுவலகம் எதிரே தற்காலிக கார் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து நகர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.


Next Story