திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x

இன்று தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

திருச்செந்தூர் கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் பல்வேறு வாகனங்களிலும் கோவிலுக்கு திரண்டு வருகிறார்கள். நேற்றும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

நீண்ட வரிசையில் சாமி தரிசனம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையை தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், உதயமார்த்தாண்ட தீபாராதனை, உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடந்தது.

பின்னர் சாயரட்சை தீபாராதனை, ராக்கால அபிஷேகம், ஏகாந்த தீபாராதனை, பள்ளியறை தீபாராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசம்

தைப்பூச தினமான 5-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து கோவில் நடை திருக்காப்பிடப்படுகிறது.

தங்க மயில் வாகனம்

இதுதவிர மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைக்கு பின்னர் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Next Story