அடையாள அட்டை வைத்திருக்கும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி
அடையாள அட்டை வைத்திருக்கும் பக்தர்கள் எந்தவித தடையின்றி பரணி தீபம், மகா தீபம், மலையேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
அடையாள அட்டை வைத்திருக்கும் பக்தர்கள் எந்தவித தடையின்றி பரணி தீபம், மகா தீபம், மலையேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இந்நாளில் திருவண்ணாமலைக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தரும் வகையில் குடிநீர் வசதி முறையாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
கிரிவலப்பாதையில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் சேகரித்து வைக்க வேண்டும். இந்தாண்டு 230 நபர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தூய்மை பணிகள் தொய்வின்றி உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் பக்தர்களின் வகதிக்காக 28 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கு 3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இனி வரும் காலங்களில் நிரந்தரமாக கிரிவலப்பாதை முழுவதும் தினந்தோறும் தூய்மைப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அடையாள அட்டை வைத்திருக்கும் பக்தர்கள் தங்கு தடையின்றி பரணி தீபம், மகாதீபம் மற்றும் மலையேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
2500 பக்தர்கள் மட்டுமே...
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பக்தர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு 3 மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் உதவி செய்ய முன்வரும் தனியார் குழுக்களும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதை மற்றும் கோவில் வளாகத்திலும் 108 அவசர சேவை ஊர்தி தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தீபத்திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து கிரிவலப்பாதையில் அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானம், அடிஅண்ணாமலை, வருணலிங்கம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளான நவீன மயமாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், நடைபாதை உள்ளிட்டவைகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், முதன்மை தலைமை பொறியாளர் (பொதுப்பணித்துறை) விஸ்வநாத், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.