பங்குனி உத்திர திருவிழா நிறைவு; தீர்த்தக்காவடிகளுடன் பழனியில் குவிந்த பக்தர்கள்


பங்குனி உத்திர திருவிழா நிறைவு; தீர்த்தக்காவடிகளுடன் பழனியில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 8 April 2023 2:15 AM IST (Updated: 8 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடிகளுடன்குவிந்தனர். கிரிவீதியில் ஆட்டம், பாட்டத்துடன் வலம் வந்தனர்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடிகளுடன்குவிந்தனர். கிரிவீதியில் ஆட்டம், பாட்டத்துடன் வலம் வந்தனர்.

பங்குனி உத்திரம்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக சுமந்து பழனிக்கு வர தொடங்கினர். பின்னர் முருகப்பெருமானுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மேலும் திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 3-ந்தேதி திருக்கல்யாணமும், சிகர நிகழ்ச்சியாக 4-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியிறக்குதலுடன் நிறைவு பெற்றது.

திருஊடல் நிகழ்ச்சி

இதையொட்டி நேற்று காலை 7.20 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புதுச்சேரி சப்பரத்தில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்த தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரபாகுதேவராக ஓதுவார் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவில் நடைதிறந்து, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த திரு ஊடல் நிகழ்ச்சியை ஓதுவார் நாகராஜன் பாடினார்.

தீர்த்தக்காவடிகள்

இதற்கிடையே தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும், நேற்று பங்குனி உத்திர திருவிழாவின் கடைசி நாள் என்பதாலும் பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக தீர்த்தக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் கிரிவீதிகளில் வலம் வந்தனர். அப்போது மேளம் இசைக்கப்பட்டு பெண்கள், பக்தர்கள் ஆடி வந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி, மலைக்கோவில் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

ரோப்கார் நிலையத்தில் அலைமோதிய கூட்டம் காரணமாக கிரிவீதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தற்போது கடும் வெயில் நிலவுவதால் காத்திருந்த பக்தர்கள் தலையில் துணியால் முக்காடு போட்டும், குடை பிடித்தும் இருந்தனர். தற்போது கடும் வெயில் நிலவுவதால் ரோப்கார் நிலையத்தில் நிழற்பந்தல் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வெளியூரில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுதவிர பழனி கிரிவீதிகளில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்ததால் அலகு குத்தி வந்த பக்தர்கள் கிரிவலம் வர கடும் சிரமம் அடைந்தனர். எனவே கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story