பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை சீசன்
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.
மேலும் சபரிமலை சீசன் என்பதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என வெளிமாநில அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு அதிக அளவில் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலையில் அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்ககள் கூட்டம் அலைமோதுகிறது.
நீண்ட வரிசையில் காத்திருப்பு
இந்தநிலையில் இன்று வாரவிடுமுறை, முகூர்த்த நாள் என்பதால் பழனியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.
அதிகாலை முதலே பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
இதேபோல் வெளியூரில் இருந்து கார், பஸ், வேனில் பக்தர்கள் அதிக அளவில் வந்ததால் கிழக்கு கிரிவீதி சுற்றுலா பஸ்நிலையம் வாகனங்களால் நிரம்பியது. இதனால் அங்கு நிறுத்த இடமின்றி பலர் கிரிவீதிகளில் வாகனங்களை நிறுத்தி சென்றனர்.
2 மணி நேரம்
அடிவாரம் மட்டுமின்றி மலைக்கோவிலில் உள்ள பொது, சிறப்பு கட்டணம் தரிசன வழிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் தரிசன வழிகளை தாண்டி வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அலைமோதிய கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
பழனியில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது தூறல் மழை பெய்தது. இதனால் பக்தர்கள் சீதோஷ்ண சூழலை அனுபவித்தபடி, சாமி தரிசனம் செய்தனர்.