ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் குவிந்த பக்தர்கள்


ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் குவிந்த பக்தர்கள்
x

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

ஆங்கில புத்தாண்டு

திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆங்கில புத்தாண்டு தினமான இன்று திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன் பின்பு அம்மனுக்கு பால், பழம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து 5.30 மணியளவில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணியளவில் உச்சிகால பூஜை நடைபெற்று தீபாராதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் அம்மன் தங்க ரதத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வருதல் நடந்தது.

இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி காளகத்தீஸ்வரர்-ஞானாம்பிகை, அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 5 மணியளவில் பெண்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். அதைத்தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று சுவாமி பத்மகிரீஸ்வரர் முன்பு கோவில் குருக்கள் திருவாசகத்தை பாடினர்.

பக்தர்கள் வழிபாடு

திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி காலையில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, திருப்பரங்குன்றம் முருகன் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மேலும் திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோவில், ஆனந்தகிரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

திருமலைக்கேணி

நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், பகவதி அம்மன், காளியம்மன், ராக்காயி அம்மன், தில்லை காளியம்மன் கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.


Next Story