பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்த பக்தர் உயிரிழப்பு
பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்த பக்தர் திடீரென்று இறந்தார்.
கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 44). தனியார் நிறுவன ஊழியர். இவர், சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் ஜெயச்சந்திரன் தனது குடும்பத்தினருடன், படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். படிப்பாதையில் பாதி தூரம் சென்றபோது திடீரனெ அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், கோவிலில் உள்ள மருத்துவ உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மருத்துவ பணியாளர்கள் ஜெயச்சந்திரனை மீட்டு ரோப்கார் மூலம் அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்சில் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ஜெயச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது கோவை பக்தர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து பழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் கோவில் மருத்துவ மையத்தில் கூடுதல் சிகிச்சை வசதிகள் செய்ய வேண்டும். கோவிலில் இருந்து ஆஸ்பத்திரிக்கு பக்தர்களை ஏற்றி செல்ல அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.