தொடர் விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வாரவிடுமுறை, தொடர்விடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்தவகையில் ஆயுதபூஜை, விஜயதசமி என தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறை எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் பழனிக்கு படையெடுத்தனர்.
ஐப்பசி மாத பிறப்பையொட்டி சபரிமலையில் நடை திறந்து உள்ளதால், அங்கு சாமி தரிசனம் செய்ய வரும் அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வருகை தந்தனர். இதனால் அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது, கட்டணம் மற்றும் கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அடிவாரத்தில் இருந்து பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.