பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்
நத்தம் அருகே அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
நத்தம் அருகே மணக்காட்டூரில் உள்ள தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலில் சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமி அய்யப்பனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அய்யனார் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்த இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு சுவாமி அய்யப்பன் ரதத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், குருசாமி முதலில் பூக்குழி இறங்க, அதன்பிறகு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி பூக்குழி இறங்கினர்.