9¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை
9¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்படுகிறது.
கடலூர்;
இந்தியா மற்றும் தமிழக அளவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு குடற்புழு தொற்று ஒரு காரணமாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) 9 லட்சத்து 25 ஆயிரத்து 277 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விடுபட்ட அனைவருக்கும் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு குடற்புழு மாத்திரை வழங்கும் திட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 7 லட்சத்து 1,617 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள 2 லட்சத்து 23 ஆயிரத்து 660 பெண்களும் (கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயனடைய உள்ளனர்.
குடற்புழு நீக்க மாத்திரை அளவாக, 1 முதல் 2 வயது வரையுள்ளவர்களுக்கு ½ மாத்திரை (200மி.கி.), 2 முதல் 30 வயது வரையுள்ளவர்களுக்கு 1 மாத்திரை (400 மி.கி.) எடுத்துக்கொள்ளலாம். இக்குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் திட்டம் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.