நெல் கொள்முதல் நிலையங்கள், அரிசி ஆலைகளில் டி.ஜி.பி. ஆய்வு
நெல் கொள்முதல் நிலையங்கள், அரிசி ஆலைகளில் டி.ஜி.பி. ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளிடம் நெல்லை நேரடி கொள்முதல் செய்வதற்கு, வெளிமாவட்டங்களில் இருந்து ஏதேனும் இடைத்தரகர்கள் வாயிலாக உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள் எடுத்து வருவதையும், அரிசி ஆலைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையின் டி.ஜி.பி. ஆபாஸ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில், திருச்சி, தஞ்சை சரக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எந்த ஆவணங்களும் இல்லாமல் சுமார் 29½ டன் நெல் ஏற்றி வரப்பட்ட 2 லாரிகளை பிடித்து நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 3 லாரிகளை பிடித்து லாரி டிரைவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.05 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை திருச்சி மண்டலத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மற்றும் 36-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மருங்குளத்தில் உள்ள நவீன அரிசி ஆலைகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் டி.ஜி.பி. ஆபாஸ்குமார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மற்றும் போலீசார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.