கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனபால் ஆஜரானார்
சேலம் போலீசாரின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனபால் ஆஜரானார்.
கோத்தகிரி
சேலம் போலீசாரின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனபால் ஆஜரானார்.
ஆதாரங்களை அழித்ததாக கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கில் கைதான 10 பேரும், ஜாமீனில் உள்ளனர்.
இதற்கிடையில் ஆதாரங்களை அழித்ததாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். தொடர்ந்து அவர்கள் கோத்தகிரியில் தங்கியிருந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
போலீஸ் நிலையத்தில் ஆஜர்
இந்த நிலையில் சொத்து சம்பந்தமான வேறொரு வழக்கில் விசாரணை நடத்த தனபாலை சேலம் போலீசார் நேற்று அதிகாலை 3 மணிக்கு கோத்தகிரிக்கு வந்து அழைத்து சென்றனர். இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டிய நிலையில்,இன்று அவர் கையெழுத்திடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் சேலம் போலீசார் விசாரணையை முடித்து, அவரை அனுப்பி வைத்தனர். பின்னர் இன்று காலையில் கோத்தகிரிக்கு வந்த தனபால், ரமேசுடன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வழக்கம்போல் கையெழுத்து போட்டுவிட்டு சென்றார்.