புயலில் சிதைந்த தனுஷ்கோடி
1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடியானது ராமேசுவரத்திற்கு அடுத்தபடியாக தொழில் நகரமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வந்தது.
தனுஷ்கோடி,
1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடியானது ராமேசுவரத்திற்கு அடுத்தபடியாக தொழில் நகரமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வந்தது.
தனுஷ்கோடி வரை ரெயில்
தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. 2 கப்பல்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ரெயில் நிலையம், துறைமுகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம், தபால் நிலையம், ரெயில்வே குடியிருப்புகள், கோவில்கள் கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் ஆகியவையம் தனுஷ்கோடியில் இருந்தன.
1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள் நேராக தனுஷ்கோடி சென்றுவிடும். ராமேசுவரத்திற்கு வர விரும்புவர்கள், பாம்பன் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சண்டிங் என்று சொல்லக்கூடிய பயணிகள் ரெயிலில்தான் ராமேசுவரம் சென்றனர்.
தனுஷ்கோடிக்கும்-இலங்கை தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில் பலவிதமான பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்தது. ஏராளமான மீனவர்களும் குடிசைகள் அமைத்து வசித்துள்ளனர். எந்நேரமும் களைகட்டி காணப்பட்டு இருந்த தனுஷ்கோடி நகரமானது, யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரே நாள் இரவில் வீசிய கடும் புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் முழுமையாக அழிந்து போனது என்றால் யாராலும் நம்ப முடியாது.
திக்...திக்... நேரங்கள்
1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி காலையில் இருந்தே தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியதுடன் மழையும் பெய்தது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகமானது.
மழையும் வேகம் எடுத்தது. மாலை 6 மணிக்கு அதிபயங்கர காற்று வீசி கன மழையாகவும் கொட்டியது. 23-ந் தேதி அன்று இரவு 8 மணியில் இருந்து 24-ந் தேதி அதிகாலைக்குள் கடல் கொந்தளிப்பால் தென்கடலான மன்னர் வளைகுடா கடல் பகுதியும், வடக்கு கடலான பாக்ஜலசந்தி என இருகடலும் ஒரே நேரத்தில் ஆக்ரோஷத்தை காட்டின.
தனுஷ்கோடி நகரமானது முழுமையாக கடல் நீரில் மூழ்கி சின்னாபின்னமானது.
மறுநாள் (டிசம்பர் 24) அன்று காலையில் பார்த்தபோது தனுஷ்கோடி பகுதியில் 2 கடலும் ஒன்று சேர காட்சி அளித்ததுடன் தனுஷ்கோடியில் இருந்த அனைத்து கட்டிடங்களும் மண்ணோடு மண்ணாக தரைமட்டமாக புதைந்து போய் இருந்தன. ஆங்காங்கே மனித உடல்கள் கடல் நீரில் மிதந்தன.
கடலில் இழுத்து செல்லப்பட்ட ரெயில்
டிசம்பர் 23-ந் தேதி புயல் தாக்குவதற்கு முன்பு விடுமுறைக்காக 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் என சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் ரெயிலில் தனுஷ்கோடிக்கு வந்து கொண்டிருந்தனர். ஆனால் இரவு ஏற்பட்ட புயலால் தண்டவாளங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. ரெயிலும் கடலுக்குள் பெட்டிகளுடன் சேர்ந்து இழுத்துச் செல்லப்பட்டு, அதில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
தனுஷ்கோடியில் மட்டும் சுமார் 2000-க்கும் அதிகமானோர் இறந்து போயிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. தனுஷ்கோடி புயலில் இருந்தவர்களில் பல பேர் உடல்கள் கிடைக்கவில்லை.
கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
புயலுக்குப் பிறகு தனுஷ்கோடியானது, மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதுபோல் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
வர்த்தக நகரம் என்று அழைக்கப்பட்டு வந்த தனுஷ்கோடி நகரம் ஒரே நாள் இரவில் புயலில் அழிந்து போன சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தனுஷ்கோடி வரை வந்த சாலை
புயலுக்கு பிறகு 50 ஆண்டுகளுக்கு மேலாக தனுஷ்கோடிக்கு பெரிதாக எந்த வசதியும் செய்யப்படாமல் இருந்தது.
சுற்றுலா பயணிகள் நலன் கருதி மத்திய அரசு தனுஷ்கோடி வரையிலும் சாலை அமைத்து, 2017-ம் ஆண்டு இந்த சாலை திறந்து போக்குவரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் தனுஷ்கோடிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும்கூட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கலங்கரை விளக்கம்
தற்போது மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் சார்பில் கம்பிப்பாடு கடற்கரையில் 50 மீட்டர் உயரத்தில்ரூ.8 கோடி நிதியில் புதிதாக கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டு, அதுவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை வரையிலும் ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது. சர்வே பணியும் முடிந்துள்ளது. இந்த ரெயில் பாதை வர உள்ள இடங்களில் அடையாள கற்களும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. விரைவில் ராமேசுவரம் தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பு
புயலால் சிதைந்து போன தனுஷ்கோடியில் அந்த சம்பவ்ததை நினைவுபடுத்தும் சிதிலங்கள் நின்று கொண்டிருக்கின்றன. அந்த கட்டிடங்களை மீண்டும் எழுப்பி, சுற்றுலா பயணிகள் அனைவரும் தனுஷ்கோடி பற்றி தெரிந்து கொள்வதற்கான வசதிகளை அரசு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாக உள்ளது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள நினைவுதூண் மற்றும் அதில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும் முழுமையாக சேதமடைந்த நிலையில் அலங்கோலமாக பல ஆண்டுகளாக காட்சி அளித்து வருகின்றது. அதுபோல் இதுவரையிலும் ஒரு ஆண்டு கூட புயல் நினைவு தினம் ஏற்பட்ட டிசம்பர் 23-ந் தேதி அன்று அரசு சார்பிலோ மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ அஞ்சலி செலுத்தும் நிகழ்வு எதுவும் நடந்ததாக இல்லை. எனவே அந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும என பலரும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.