பச்சிளம் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபருக்கு தர்மஅடி


பச்சிளம் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபருக்கு தர்மஅடி
x

ஓசூர் அரசனட்டி பகுதியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாயிடமிருந்து பறித்து கடத்த முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அரசனட்டி பகுதியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாயிடமிருந்து பறித்து கடத்த முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பச்சிளம் குழந்தையை கடத்த முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் அபினவ். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி நதியா. இவருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று நதியாவும், அவரது தாயார் வள்ளியும் வீட்டின் முன்பு பச்சிளம் குழந்தையை வைத்து கொண்டு அமர்ந்து இருந்தனர்.

அப்போது, அவர்களின் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த வடமாநில வாலிபர் ஒருவர் நதியாவின் கையில் இருந்த குழந்தையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நதியாவும், அவரது தாயாரும் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போதும் அந்த நபர் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடத்த முயன்றார். இதனால் பதறிப்போன தாய்-மகள் 2 பேரும் சத்தம் போட்டுள்ளனர்.

தர்ம அடி

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் நதியாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை பறிக்க முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த நபரை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த நபர் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்க மறுத்து அங்கிருந்தவர்களை கட்டையால் தாக்க முயன்றார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த நபரை அவசர வார்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பச்சிளம் குழந்தையை கடத்த முயன்றவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முதரு பாஸ்கி மகன் பரகஷ் பாஸ்கி (வயது 30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையை தாயிடம் இருந்து, வடமாநில வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story