பெண்ணாடம் அருகே தொழிலாளியிடம் பணம், செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி


பெண்ணாடம் அருகே தொழிலாளியிடம் பணம், செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி
x

பெண்ணாடம் அருகே தொழிலாளியிடம் பணம், செல்போனை பறித்துச் சென்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் விஜயபிரபாகரன் (வயது 30). கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளி பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 3 பேர் திடீரென விஜயபிரபாகரனை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2,500-ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் படுகாயமடைந்த விஜயபிரபாகரன் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடிய 3 பேரையும் விரட்டிச் சென்றபோது, ஒரு வாலிபர் மட்டும் பிடிபட்டார். மற்ற 2 பேர் ஓடிவிட்டனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இதையடுத்து பிடிபட்ட வாலிபரை அப்பகுதி மக்கள் அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்ததோடு, இதுபற்றி கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கட்டிட தொழிலாளியிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த விஜயபிரபாகரன் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story