இளம்பெண்ணிடம் நகை பறித்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தர்மஅடி
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இளம்பெண்ணிடம் நகை பறித்த ஜவுளிக்கடை ஊழியரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இளம்பெண்ணிடம் நகை பறித்த ஜவுளிக்கடை ஊழியரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நகை பறிப்பு
நெல்லை கொங்கந்தான்பாறை மல்லக்குளத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மகள் காயத்ரி (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையம் எதிரே பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு நடந்து வந்த மர்மநபர் திடீரென்று காயத்ரியிடம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி கூச்சலிட்டார். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து, அந்த மர்மநபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
ஜவுளிக்கடை ஊழியர் கைது
பின்னர் அந்த நபரை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், அம்பை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜிஸ் (28) என்பதும், அவர் நெல்ைலயில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அஜிசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.