தர்மபுரி மாவட்ட தக்காளி சேலம் உழவர் சந்தையில் விற்பனை
சூரமங்கலம்:-
கூடுதலாக உற்பத்தியாவதால் தர்மபுரி தக்காளி, சேலம் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தர்மபுரி தக்காளி
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக சரிவடைந்தது. இதனால் விவசாயிகள் தக்காளி பறிக்கும் கூலி கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் கடும் நஷ்டமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
இதுதொடர்பாக தக்காளி விவசாயிகள், உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தர்மபுரி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தர்மபுரி மாவட்டத்தில் கூடுதலாக உற்பத்தியாகும் தக்காளிகளை சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விற்பனை
அதாவது தர்மபுரி தக்காளியை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகம் திட்டத்தின் கீழ் (e- NAM) கொள்முதல் செய்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலமாக சேலத்தில் உள்ள சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய உழவர் சந்தைகளில் வெள்ளோட்டமாக விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி இந்த திட்டத்தின் கீழ் தக்காளி விற்பனை தொடக்க விழா நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் வேளாண்மை மற்றும் விற்பனை துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு தக்காளி விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை அலுவலர் கஜேந்திரன், நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதேவி, பசுபதி, சிவசங்கர், தென்றல் மற்றும் விவசாயிகள், நுகர்வோர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உழவர் சந்தைகளில் வெள்ளோட்டமாக தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது.
அதிக லாபம்
இதுகுறித்து துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், சேலம் உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய 6.1 டன் தர்மபுரி தக்காளி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கூட்டமைப்பு மூலமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நுகர்வோருக்கு தரமான தக்காளி கிடைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என்றார்.