தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் திருவிழா மாவிளக்கு ஊர்வலம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாரியம்மன் திருவிழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெரு மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புற்று மண் எடுத்தல், கங்கை பூஜை மற்றும் சக்தி கரகம் அழைத்தல் நடைபெற்றது. தொடர்ந்து தீமிதி விழா நடந்தது.
மேலும் மகா மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் விருந்தாடி அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழாவும், அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தலும், காட்றாயப்ப சாமி மற்றும் கோலாட்டம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாவிளக்கு ஊர்வலம்
விழாவின் முக்கிய நாளான நேற்று தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் விருந்தாடி அம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து பங்கேற்றனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள விருந்தாடி அம்மன் கோவிலை சென்று அடைந்தது. அங்கு சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று மாலை செல்லியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது.
இன்று
இன்று (வெள்ளிக்கிழமை) மகா மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் அம்மன் திருவீதி உலாவும், நாளை (சனிக்கிழமை) சக்தி முனியப்பன் கோவிலில் இருந்து பந்தகாசி ஊர்வலமும், அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) விழா கொடி இறக்கம், கும்ப பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சிட்டி முருகேசன், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.