தர்மபுரியில் டி.வி. ஷோரூம் உள்பட 2 கடைகளில் திருட்டு
தர்மபுரியில் டி.வி. ஷோரூம் உள்பட 2 கடைகளில் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் சி.சி.டி.வி. பதிவு கருவிகளை திருடி சென்றனர்.
ஷோரூமில் திருட்டு
தர்மபுரி நகரில் சேலம் சாலையில் பாரதிபுரம் பகுதியில் பிரபல டி.வி. ஷோரூமான ஷார்ப்ட்ரானிக்ஸ் கடந்த மாதம் புதிதாக திறக்கப்பட்டது. இங்கே 35-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு 9.10 மணிக்கு வியாபாரத்தை முடித்த பின் ஷோரூமை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றனர். பின்னர் நேற்று காலை 9.45 மணிக்கு ஊழியர்கள் ஷோரூமை திறக்க வந்தனர்.
அப்போது ஷோரூமின் முன் பகுதியில் உள்ள ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஷோரூமின் உள்பகுதியில் சென்று பார்த்தனர். அப்போது பணம் வைக்கும் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.63 ஆயிரத்து 700 திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
கைரேகைகள் சேகரிப்பு
இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் ஷோரூமின் உள்ளே இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு செய்யும் டி.வி.ஆர். பாக்ஸ் கருவியையும் எடுத்து சென்று விட்டனர். இந்த திருட்டு குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து பதிவு செய்தனர். இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு கடை
இதேபோல் தர்மபுரியில் சேலம் சாலையில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு கருவிகளை மட்டும் அவர்கள் திருடி சென்றனர்.
இது தொடர்பாகவும் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்மபுரியில் டி.வி. ஷோரூம் உள்பட 2 கடைகளில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.