17 வயது மாணவியை திருமணம் செய்து பலாத்காரம்: தர்மபுரி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு


17 வயது மாணவியை திருமணம் செய்து பலாத்காரம்: தர்மபுரி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

17 வயது மாணவியை குழந்தை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

கேட்டரிங் கல்லூரி

தர்மபுரி மாவட்டம் ஜீதாஅள்ளி காமராஜர் நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் சுபாஷ் (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுபாஷ் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

அப்போது அவருக்கும், அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த ஜோலார்பேட்டையை சேர்ந்த 17 வயதுடைய மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி விடுதியில் இருந்து வெளியே சென்ற அந்த மாணவி பின்னர் திரும்பி வரவில்லை.

10 ஆண்டுகள் சிறை

மாணவி காணாமல் போனது குறித்து அவருடைய தந்தை கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுபாஷ், அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்து கொண்டதுடன், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சுபாசை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், 17 வயது மாணவியை கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சுபாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.


Next Story