கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி உறவினர்கள் தர்ணா


கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி உறவினர்கள் தர்ணா
x

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அடுத்த உலகப்பாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 27). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சவுமியா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதம் ஆன நிலையில் சவுமியா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த சவுமியாவிடம், 2 பேர் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளனர். அப்போது சவுமியா தண்ணீர் கொண்டு வர வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சவுமியாவை தாக்கி உள்ளனர். மேலும் அவரது வயிற்றில் எட்டி உதைத்ததால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி உள்ளார். மர்மநபர்கள் சவுமியாவை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் சவுமியாவை மீட்டு அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுமியாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி, அவரது உறவினர்கள் மருத்துவமனை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, அரசு மருத்துவமனை மருத்துவர் கற்பக செல்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணியை எதற்காக மர்ம நபர்கள் தாக்கினர் என்பது குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story