வீட்டை விட்டு துரத்திய கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா
விருத்தாசலத்தில் வீட்டை விட்டு துரத்திய கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஆலடி சாலை காமராஜர் நகரை சேர்ந்தவர் வசந்த் (வயது 29). இவர் விருத்தாசலம் நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவித்யா(24) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வசந்த் தனது பெற்றோருடன் சேர்ந்து ஸ்ரீவித்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, அவரை பெற்றோர் வீட்டுக்கு துரத்தி விட்டதாக தொிகிறது.
இதற்கிடையே ஸ்ரீவித்யா, தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், வசந்த் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது வசந்த், ஸ்ரீவித்யாவை ஏற்றுக்கொள்வதாக கூறி போலீசாரிடம் தெரிவித்து எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இதனால் ஸ்ரீவித்யா நேற்று வசந்த் வீட்டுக்கு சென்றபோது அவரை வீட்டிற்குள் விடாமல், அவரது மாமியார் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார், ஸ்ரீவித்யா மற்றும் அவரது மாமனார், கணவர் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.