குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா


குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திம்மாபட்டி கிராம மக்கள் குடிநீர் கேட்டு அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திம்மாபட்டி கிராம மக்கள் குடிநீர் கேட்டு அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம் நாரணமங்கலம் அருகே உள்ளது திம்மாபட்டி கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் கடைசி எல்லை பகுதியான இங்கு இதுநாள் வரை காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் திம்மாபட்டி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நாள்தோறும் ரூ.15 என விலை கொடுத்து தனியார் வண்டிகளில் வரும் குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக திம்மாபட்டி கிராமத்தினர் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தர்ணா

எனவே, உடனடியாக தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி திம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Related Tags :
Next Story