ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா


ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா
x

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலையும், கூலியும் வழங்க வேண்டும், இத்திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும், நிறுத்தப்பட்ட முதியோர்களுக்கு மீண்டும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் பொன்னுத்தாய் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்செல்வி, செயலாளர் உமாமகேஸ்வரி, பொருளாளர் இலக்கியலட்சுமி, துணை செயலாளர் சங்கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சித்ரா, நிர்வாகிகள் பிரேமா, காஞ்சனா, பிரியா, யுகந்தி, ராஜேஸ்வரி, ராதிகா, லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் திரண்டு கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட சிலரை கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவர்களில் சிலர், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story